Wednesday, December 31, 2014

2015ம் வருட வாழ்க்கை கணக்கு

இந்த உலகில் வாழ்கிற விசுவாசிகளானாலும் சரி, அவிசுவாசிகளானாலும் சரி, நாம் ஒவ்வொருவர் செய்யும் ஒவ்வொரு கிரியையும் தேவனால் கவனிக்கப்பட்டு வருகிறது. அந்த எல்லா கிரியைக்கும் தக்க பலன் உண்டு. அந்த நாள் நியாயத்தீர்ப்பின் நாள் ஆகும். அந்த நாளில் சர்வத்திற்கும் நியாயாதிபதியாம் இயேசுகிறிஸ்து நியாயாசனத்தில் அமர்ந்து, நம் ஒவ்வொருவரிடமும் 'உன் உக்கிராணக் கணக்கை ஒப்புவி' என்று கட்டளையிட்டாரானால் நாம் என்ன பதில் சொல்லுவோம்? கீழ்க்ண்டவாறு நம்மை கேட்பாரானால் நாம் என்ன பதில் சொல்வோம்?
.
நான் உன் கையில் ஒப்புவித்த உலகப் பொருட்களை நீ எவ்வாறு உபயோகித்தாய்? நீ உன் வீட்டையும், நான் உனக்கு தந்த அநேக சௌகரியங்களையும் என்னுடைய மகிமைக்காக மாத்திரம் உபயோகித்தாயா? அல்லது அவைகளை உன்னுடைய புகழ்ச்சிக்காகவும், உன்னையே பிரியப்படுத்திக் கொள்வதற்காகவும் பயன்படுத்திக் கொண்டாயா?
.
நான் உனக்கு தந்த உடைகளை நீ எவ்வாறு உபயோகித்தாய்? அவைகளை பெருமைக்கும் மாயைக்கும், பிறரை பாவத்திற்கு ஏதுவாய் தூண்டுகிற விதமாக கவர்ச்சியாகவும் உடுத்தினாயா? அல்லது, தகுதியான வஸ்திரத்தினால் உன்னை ஒழுக்கமாய் மூடுவதற்கும், சீதோஷண நிலையிலிருந்து உன்னைக் காத்துக் கொள்வதற்காகவும் உடைகளை உடுத்தினாயா?
.
உன் பணத்தை நீ எவ்வாறு உபயோகித்தாய்? உன் மாம்சத்தின் இச்சைகளையும் உன் கண்களின் இச்சைகளையும் உலகத்தின் ஜீவனத்தின் பெருமைகளையும் பூர்த்தி செய்வதற்கென உபயோகித்தாயா? வீணாக செலவு செய்து உன் பணத்தை சிதறடித்தாயோ? அப்படி இல்லாமல் பணத்தை உனக்கும், உன் குடும்பத்திற்கும் தேவையானதை உபயோகித்துவிட்டு, மீதியாய் இருப்பவைகளை வாங்கிக் கொள்ளும்படி நான் நியமித்த ஏழைகளின் மூலம் எனக்கு திருப்பித் தந்தாயா?
.
நான் உனக்கு ஒப்புவித்த சரீரத்தை எப்படி உபயோகித்தாய்? நீ எனக்கு துதி செலுத்தும்படியே நாவை உனக்கு தந்தேன், அதை தீமை பேசுவதற்கும் பிரயோஜனமற்ற வீண் சம்பாஷணைகளுககும், பயன்படுத்தினாயா? அல்லது கேட்பவர்களின் செவியை கிருபை பொருந்திய வார்த்தைகளால் நிரப்பினாயா? மேலும் நான் உனக்கு நியமித்த கிரியைகளை நீ செய்து முடிக்கும்படி உனக்கு கரங்களையும் கால்களையும் இன்னும் பல உறுப்புகளையும் வழங்கியிருந்தேன். நீ அவைகளை பயன்படுத்தி உன்னை பூமிககு அனுப்பினவரின் சித்தத்தை செய்து முடித்தாயா? அல்லது உன் மாம்சத்தின் விருப்பத்தையும் உன் உணர்ச்சியும் நடத்திய பாதைகளுக்கு எல்லாம் உன் அவயவங்களை உன் இஷ்டத்திற்கு ஒப்புக் கொடுத்து விட்டாயா?
.
நான் உனக்கு கொடுத்த நேரத்தை எப்படி உபயோகித்தாய்? உன் மீதியான நேரங்களில் உன் தேவனோடு உறவாட வேண்டிய நேரங்களில் உறவாடினாயா? ஊழியம் செய்ய வேண்டிய நேரங்களில் உல்லாசமாக, அல்லது உலக காரியங்களுக்காக செலவழித்தாயா?
.
நியாயாதிபதியாம் இயேசுகிறிஸ்து நம்மைப் பார்த்து இந்தக் கேள்விகளை கேட்டால் நாம் என்ன பதில் சொல்வோம்? ஆம் ஆண்டவரே, நீர் என்னை உலகத்தில் படைத்த நோக்கத்தை நிறைவேற்றி முடித்தேன் என்று புன்னகையோடு சொல்ல முடியுமா? அல்லது தலைகுனிந்து நிற்போமா?
.
ஒருவேளை நாம் குறைவாக காணப்பட்டால், இந்த நாளிலிருந்துதானே அதை சரியாக்க முற்படுவோம். நம் நடை உடை பாவனை சொல் செயல் எல்லாம் அவரையே பிரதிபலிக்கட்டும். கர்த்தர் கிருபையாக நமக்கு கொடுத்த எல்லாவற்றிலும் அவரையே மகிமைப்படுத்துவோம். 'ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்' என்ற வார்த்தையின்படி நாம் நிச்சயமாக அவர்முன் நிற்க வேண்டும். அதற்காக நம்மை தயார்ப்படுத்துவோம்.

No comments:

Post a Comment