Wednesday, December 18, 2013

ஐடா ஸ்கடர் - வாழ்க்கை குறிப்பு

நெரிசலிலும், வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் இந்தியாவை விட்டு வெளியேறுவதே நல்வாழ்வின் தொடக்காமென கருதினார் ஐடா ஸ்கடர். ஐடாவிடம் நல்வாழ்க்கையின் உதாரணம் கேட்போருக்கு அவரது மாறாத பதில், "அமெரிக்காவும், கோடீஸ்வரருடன் திருமணமும்" என்பது தான். இந்தியாவில் நிலவிய பஞ்சமும், தெருவோரம் கிடக்கும் பிணங்களும் தான் இந்தியாவை குறித்து ஐடாவின் நினைவில் நின்ற பின்பங்கள். ‘இந்தியா’ ஒருபோதும் தனக்கு ஏற்ற நாடல்ல என்பது ஐடாவின் கணிப்பு. அவளது கணிப்புகள் எல்லாம் பரமனின் அழைப்பில் மங்கி பின் மறைந்தது.

அப்போது அவள் இந்தியாவில் தொண்டாற்றி வரும் தன் தந்தையோடு விடுமுறையை கழிக்க வந்திருந்தாள். அகல்கள் ஒளியை வீசிக்கொண்டிருக்கும் அறையில் புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்த ஐடாவின் காதுகளில் சிலரது காலடியோசை வெளித் திண்ணையில் இருந்து வந்தெட்டியது. புத்தக பார்வையை கலைத்துவிட்டு கதவருகே வந்து எட்டிப் பார்த்தாள். அங்கு பிராமணர் ஒருவர் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருக்கும் தன் 14 வயது மனைவியை காப்பாற்ற வரும்படி வேண்டினார். “அம்மா! மருத்துவச்சிகள் கை விரித்து விட்டனர். எப்படியாவது என் மனைவியையும், பிள்ளையையும் காப்பாற்றுங்கள்” என்று கதறினார். ஐடா மகப்பேறுவில் அகரம் கூடா அரியாதவள், எனவே “என் தந்தை ஒரு சிறந்த மருத்துவர். அவர் வீட்டிற்கு வந்ததும் அவரை அழைத்து வருகிறேன்” என்றாள். “ஒரு அந்நியஆண் என் இல்லத்திற்குள் நுழைவதைக் காட்டிலும், அவள் இறப்பதே மேல்” என்று மறுத்து வெளியேறினார் பிராமணர். அந்த ஏழைப்பெண்ணுக்காக வருந்தினார் ஐடா. அவளால் வேறு என்ன செய்ய முடியும். கனத்த மனதுடன் புத்தகத்திற்குத் திரும்பினாள் ஐடா.


சிறிது நேரத்தில் ஐடாவின் தந்தை வீடு திரும்பினார். நடந்ததை சொல்லி வருத்தமடைந்தாள் ஐடா. மீண்டும் காலடியோசை கேட்டது. பிராமணர் மறுபடியும் வந்திருப்பார் என்று நினைத்த ஐடா வாசலருகே ஓடோடி வந்தாள். ஆனால் அங்கோ ஒரு இஸ்லாமியர் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருக்கும் தன் மனைவிக்கு உதவி செய்ய வருமாறு ஐடாவை அழைத்தார். ஐடா ஒரு தேர்ச்சி பெற்ற மருத்துவரல்லாததால் ஐடாவின் தந்தை வந்து உதவுவதாக கூறினார். இதை கேட்ட இஸ்லாமியர் “என் மனைவியின் முகத்தை எனது குடும்பத்தாரைத் தவிர வேறு எந்த ஆணும் கண்டதில்லை. அப்படி இருக்க அயல்நாட்டவரான உங்களை என்னால் அனுமதிக்க முடியாது” சொல்லி மறுத்துவிட்டார். அவரது மனதை மாற்ற முயன்ற ஐடாவிற்கும் அவள் தந்தைக்கும் தோல்வியே மிஞ்சியது.

வேறுவழியின்றி மறுபடியும் புத்தகத்தை தொடர்ந்த ஐடாவிற்கு மீண்டும் காலடியோசை கேட்கவே, திகிலோடும் குழப்பத்தோடும் சென்று பார்த்தாள். மூன்றாவதாக ஒரு உயர் குல இந்து மனிதர் தன் மனைவியின் பிரசவத்திற்கு ஐடாவை அழைத்தார். ஐடாவுக்கு அனுபவம் இல்லாததால் அவரது தந்தை வருவதாக தெரிவித்தார். “வேண்டாம்; என் மனைவி சாகட்டும்” என்ற அதே பதில் தான் இந்த முறையும் வந்தது.


“அந்த இரவு என்னால் தூங்க முடியவில்லை... அது ஒரு பயங்கரமான இரவு. ஒரு பெண் உதவிக்கு இல்லாததால் இங்கே மூன்று பெண்களின் உயிர் பிரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் எனது அமெரிக்க தோழிகள் உல்லாச வாழ்விற்கு தொடர் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தனர். என்னால் அவர்களின் அழைப்பை நிராகரிக்க முடியவில்லை. அந்த இரவு வேண்டுதலிலும் வேதனையிலும் மட்டுமே நகர்ந்தது. அடுத்த நாள் காலை எனது எதிர்காலம் குறித்து தேவனுடைய விருப்பதை அறிந்து கொள்ள ஜெபத்தில் அமர்ந்தேன். என் வாழ்வில் முதல் முறையாக தேவனின் சத்தத்தை தெளிவாக உணர்ந்தேன். அந்த நேரமெல்லாம் தேவன் தமது ஊழியத்திற்கு என்னை அழைக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன்

ஜெபத்தை முடித்து எழுந்த போது, தாரை தப்பட்டை சத்தம் கேட்க தொடங்கியது. உடனே எனது உள்ளத்தை திகில் தொற்றிக் கொண்டது. அது நிச்சயமாக யாரோ ஒருவருடைய மரண செய்தி என்பது எனக்கு தெரியும். வேலைக்காரர்களில் ஒருவனை கிராமத்திற்குள் அனுப்பி அந்த மூன்று பெண்களின் நிலையை விசாரித்து வருமாறு அனுப்பினேன். மூவருமே இறந்துவிட்டதாக விசாரித்து வந்தவன் கூறினான். எனது அறையை மறுமடியும் மூடிவிட்டு அழுதேன், இந்திய பெண்களின் நிலையை குறித்த பாரம் என் உள்ளத்தை ஆக்கிரமித்தது. நீண்ட நேர ஜெபத்திற்கு பின்னர் “நான் அமெரிக்கா செல்லவே தீர்மானித்தேன். ஆம்! அமெரிக்கா சென்று மருத்துவம் படித்து மீண்டும் இந்தியாவுக்கே வந்து அவல நிலையில் இருக்கும் பெண்களுக்கு தொண்டாற்றுவதே இறைவனின் நோக்கம் என்பதை புரிந்துகொண்டேன்.. 


ஐடா உயர்ந்த கல்லூரிகளில் பயிலும் வாய்ப்பை பெற்றார். நன்கு பயிற்சிபெற்ற மருத்துவராக ஐடா இந்தியா திரும்பினார். பெண்களுக்கான மருத்துவமனை ஒன்றை வேலூரில் நிறுவ வேண்டுமென விரும்பினார். எதிர்பாராத விதமாக ஐடாவிற்கு மருத்துவர் லூயிசா ஹர்ட்டிடமிருந்து கடிதம் வந்தது. அதில் வேலூரில் மருத்துவமனை அமைக்கப் பணம் தேவைப்படுகிறதா? பதில் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.


ஐடாவிற்கு அந்த மூன்று பெண்களின் நினைவு வந்தது, இந்தியாவில் சுவர்களுக்கு பின்னால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்களின் அவலத்தை நினைத்தார். ஆம் பெண்களுக்கான மருத்துவமனை இங்கு உடனடி தேவை, நல்ல மருத்துவமனை கட்டுவதற்கு $50,000 தேவைப்படும் என்று பதில் எழுதினார்.


$50,000மா!! என்று பலரும் வாயைப் பிளந்தனர். அத்தொகையின் தற்போதைய மதிப்பு $500,000. $8000 திரட்டுவது சாத்தியமானது. ஆனால் உங்களால் அதில் பாதி பணத்தை கூட திரட்ட முடியுமா என்பது சந்தேகம் தான் இருந்தாலும் முயற்சி செய்யுங்கள் என்றனர். பலரும் தன்னை தாழ்வாக நினைப்பதை புரிந்து கொண்டார் ஐடா. அவர்களது எண்ணம் தவறு என்றும் பணம் தேவைப்பட்டால் அதைத் தர தேவனால் இயலும் என்றும் பதில் எழுதினார்.

ஐடா தானே நிதி திரட்ட முற்பட்டார். "யானை பசிக்கு சோழ பொறி" என்பதைப்போன்று சிறு துளியாய் டாலர்கள் வந்து சேர்ந்தன. இந்தியாவின் தேவை அதிகரித்துக்கொண்டே போனது. 10,000 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதம் தான் நிலவியது. பாரம்பரிய மருத்துவர்களிடம் சிறந்த மருந்துகள் இருந்தாலும் அதில் பெரும்பாலானவை பக்க விளைவை ஏற்படுத்தக் கூடியவை. இந்தியாவில் மருத்துவத்திற்கான அவசர தேவையை உணர்ந்தார். ஆனால மருத்துவமனை கட்டி முடிக்க குறைந்தது இரண்டாண்டுகள் பிடிக்கும். ஆகவே ஒரு சிறு அறையை தற்காலிக மருத்துவனை ஆக்கினார். திண்ணை காத்திருக்கும் அறையாக பயன்பட்டது. அவள் நோயாளிகளை நன்றாக கவனித்த போதிலும் சந்தேகம் தமிழ் இந்தியர்களை ஐடாவிடம் சிகிச்சை பெறுவதற்கு தடை செய்தது. அவளது முதல் சிகிச்சை தோல்வி அடைந்தது. ஐடாவிடம் சென்ற நோயாளி இறந்திவிட்டார் என்ற செய்தி வேகமாக பரவியது. பலரது சந்தேகம் வலுத்தது.


இறுதியாக ஒரு உயர்ந்த ஜாதி இந்துப்பெண் கண் சிகிச்சைக்காக வந்திருந்தார். இம்முறை ஐடா வெற்றிகரமாக சிகிச்சை செய்து குணமாக்கினார். அதன்பின் அவளது சேவையின் தேவை அதிகரித்தது. சலொமி என்ற அவளது வீட்டு சமையல் பணிப்பெண் தான் ஐடா பயிற்சியளித்த முதல் செவிலியர். நாளொன்றுக்கு 100, 200, 300, 400, 500 என்று ஐடாவிடம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.


அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் உள்ள மொத்த மருத்துவர்களையும் கொண்டு வந்து சேவை செய்தாலும் “சமுத்திரத்தை காயத்தால் உரசியது” போலதான் இருந்தது அன்றைய தேவை. இந்தியப் பெண்களுக்கு சேவை செய்ய இந்திய பெண்களுக்கே பயிற்சி அளிக்கவேண்டுமென்று தீர்மானித்த ஐடா வேலூர் செவிலியர் பாடசாலையை உருவாக்கினார். செவிலியருக்கு பயிற்சியளிக்கத் தன்னால் கூடுமானால் மருத்துவருக்கும் பயிற்சி அளிக்கக் கூடுமென்று நம்பினார் ஐடா. மீண்டும் நம்பிக்கை ஜெயித்தது. வேலூர் மருத்துவக் கல்லூரி உருவானது. அது சுலபமாக நடக்கவில்லை. காலம் செல்லச் செல்ல நெருக்கடியின் விளிம்பிற்கு வந்தார் ஐடா. ஆனால் கடவுள் எப்பொழுதும் போலக் காப்பாற்றினார். இக்கட்டான நிலை ஒன்றில் ஐடா எழுதினார் “முதலில் நன்கு சிந்தனை செய்; பின்பு துணிந்து செய்; உண்மைகளை தெரிந்துகொள்; செலவை மதிப்பிடு; பணம் முக்கியம் அல்ல; நீ கட்டிக்கொண்டிருப்பது மருத்துவக் கல்லூரியல்ல; அது கடவுளின் ராஜாங்கம்” இது கடவுளின் விருப்பமென்றால் கடவுளே கல்லூரியைத் திறந்து வைப்பார் என்ற நம்பிக்கையின் பலனாய் கல்லூரி தொடங்கியது.


தன் பாதத்தில் படிந்த இந்தியாவின் தூசியை தட்ட விரும்பிய அந்த பெண் பின்னாளில் இந்தியர்களின் இதய சிம்மாசனத்தில் இடம்பிடித்தார். பிரிட்டிஷ் மற்றும் இந்திய அரசாங்கம் அவருக்கு உயர்ந்த விருதுகளை வழங்கியது. காந்தியடிகள் அவரை தேடி சந்தித்தார். ஐடா சர்வதேச புகழ் பெற்றார். ஐடாவின் கடவுள் நம்பிக்கை அழிவில்லாதது. அதுவே அந்த மருத்துவச்சியின் மதிப்பிற்குரிய சான்றாக இன்றளவும் காலங்களை கடந்து நிலைநிற்கிறது, அவளது இறை நம்பிக்கையே அவளை விசித்திர மருத்துவச்சியாக்கி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
  

நன்றி
கதம்பம் [இ-இதழ்] 

No comments:

Post a Comment