Tuesday, February 18, 2014

கடவுள் இருக்கிறார்


தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். - சங்கீதம் 53:1.
.
ஒரு நாள் ஒரு கிறிஸ்தவ மனிதர், தன் முடியை வெட்டிக்கொள்வதற்காக ஒரு நாவிதனிடம் (Barber) சென்றிருந்தார். அப்போது இரண்டு பேரும் நாட்டு நடப்புகளையும் மற்றும் அநேக காரியங்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பேச்சு மத சம்பந்தமான நம்பிக்கையைக் குறித்து வந்த போது அந்த நாவிதன் எனக்கு கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்கிற நம்பிக்கை இல்லை என்று கூறினான். அதற்கு கிறிஸ்தவர் ஏன் என்று கேட்டார். அதற்கு நாவிதன், “கடவுள் என்று ஒருவர் உண்டென்றால் ஏன் மக்கள் பட்டினியால் மடிய வேண்டும்? ஏன் அனேகர் நோயாளிகளாகக் கஷ்டப்படுகிறார்கள்? கடவுள் என்று ஒருவர் இருந்தால் கஷ்டம் வேதனை என்று ஒன்றும் இருக்காது, ஒரு அன்புள்ள கடவுள் இவற்றையெல்லாம் அனுமதிக்கமாட்டார்" என்றுக் கூறினான். அந்த கிறிஸ்தவர் பதில் சொல்ல யோசித்துவிட்டு, ஏன் வீணாக வாக்குவாதம் பண்ண வேண்டும் என்று நினைத்து ஒன்றும் பேசாமல் தன் வேலையை முடித்து விட்டு வெளியே வந்தார். அவர் வெளியே வந்த போது, ஒரு மனிதன் மிக நீளமான தாடியுடனும், நீளமான அழுக்கு தலைமுடியுடனும் நின்றுக்கொண்டிருந்தான். அவனைக் கண்டவுடன் அந்த கிறிஸ்தவர் திரும்பவும் அந்த நாவிதனிடம் சென்று, 'உனக்குத் தெரியுமா இந்த உலகத்தில் நாவிதர்களே இல்லை' என்றுக் கூறினார். அதற்கு அந்த நாவிதன், "நீர் எப்படி அப்படிச் சொல்லலாம்? நான் இங்கே இருக்கிறேன், உமக்கு தலைமுடியை நான் இப்போது தானே வெட்டினேன்" என்று வேகமாக கூறினான். அப்போது அந்த கிறிஸ்தவர், 'இல்லை நாவிதர்கள் என்பவர்கள் இல்லை, அப்படி இருந்தால், இந்த மாதிரி ஒரு மனிதன் இப்படி அழுக்கு முடியோடு வெட்டாமல் இருப்பானா' என்றுக் கேட்டார். அதற்கு நாவிதன், 'நாவிதர்கள் இருப்பது உண்மை, ஆனால் இந்த மனிதர்கள் என்னிடம் வருவதில்லை, அதனால்தான் இப்படி இருக்கிறார்கள்' என்றுக் கூறினான்.
.
அப்போது அந்தக் கிறிஸ்தவர் கூறினார், "சரியான பாயிண்டைச் (Correct Point) சொன்னாய். அதுப் போலத்தான் ஆண்டவரும் இருக்கிறார். ஆனால் மனிதர்கள் அவரைத் தேடுவதில்லை, அவரிடம் போவதில்லை, அதனால் தான் இந்த உலகத்தில் இத்தனை பாடுகளும் வேதனைகளும்" என்றுக் கூறிவிட்டு ஒரு மனிதனை கர்த்தரை நம்ப வைத்த திருப்தியில் அந்த இடத்தைவிட்டுச் சென்றார்.
.
நம்மை சுற்றி இருக்கிற இயற்கையின் அழகேச் சொல்லும், அவற்றை படைத்த தேவன் ஒருவர் இருக்கிறார் என்று. வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதுளூ அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார். அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போலிருந்து, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது. அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை. - (சங்கீதம் 19:1-6). இவைகளையெல்லாம் படைத்தவர் நம் தேவாதிதேவனல்லவா? நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன், உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். ஆம், நம்முடைய உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றுமே கர்த்தர் ஒருவர் உண்டு என்பதையும், அவர் எத்தனை ஞானமுள்ளவர் என்பதையும் வெளிப்படுத்துகிறது.

No comments:

Post a Comment