Friday, December 21, 2012

கணவனும் மனைவியும் - ஒரே மாம்சம்

ஒரு கணவனும் மனைவியும் திருமண ஆலோசகரிடம் தங்கள் திருமணத்தின் பிரச்சனைகளைக் குறித்து ஆலோசனைப் பெற சென்றிருந்தனர். அவரிடம் அமர்ந்த மாத்திரத்தில், இருவரும் ஒரே நேரத்தில் ஒருவர் மேல் இருக்கும் குறைபாடுகளைக் குறித்து, விடாமல் பேச ஆரம்பித்தனர். ஒருவர் மேல் ஒருவர் குற்றம்சாட்டி, பேசிக் கொண்டேஇருந்தனர். அதை பொறுமையோடுக் கேட்டுக் கொண்டிருந்த ஆலோசகர், முடிவில், ‘இப்போது நீங்கள் மற்றவர்களிடம் கண்ட நல்ல குணங்களைப் பற்றிக் கூறுங்கள்’ என்றார். இருவரும் மௌனமாக இருந்தனர்.
.
சிறிது நேரம் கழித்து அவர் இருவரிடமும் ஒரு வெள்ளைத்தாளையும் ஒரு பேனாவையும் கொடுத்து, ‘ஏதாவது ஒரு சில நல்ல குணங்களையாவது இந்தத் தாளில் எழுதுங்கள்’ என்றுக் கூறினார். அப்போதும் இருவரும் பேசாமல் இருந்தனர். வெகு நேரம் கழித்து, கணவன் அந்தத் தாளில் ஏதோ எழுத ஆரம்பித்தார். உடனே மனைவியும் வீறாப்பாக, வேகமாக எதையோ எழுத ஆரம்பித்தாள். கடைசியில் இருவரும் எழுதுவதை நிறுத்தினர். மனைவி தான் எழுதிய தாளை அந்த ஆலோசகரிடம் தள்ளினாள். அப்போது அவர், ‘இல்லை, நீங்களே உங்கள் கணவரிடம் கொடுங்கள்’ என்றார். அரைமனதுடன் அந்தத்தாளை கணவரிடம், பாதி கையை நீட்டிக் கொடுத்தாள். கணவரும் தன் தாளை அவளிடம் கொடுத்தார்.
.
இருவரும் வாசிக்க ஆரம்பித்தனர். அப்போது மனைவியின் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது. அவள் அந்த தாளை தன் இருதயத்தோடு வைத்து, அழ ஆரம்பித்தாள். தன் கணவன் தன்னைப் பற்றி இந்த அளவு நல்லதாக அறிந்து வைத்திருக்கிறாரே என்று நினைத்து, அவளால தாங்க முடியவில்லை. அந்த சூழ்நிலையின் இறுக்கம் மாற ஆரம்பித்தது. இருவரும் சந்தோஷமாக அந்த இடத்தை விட்டுச் சென்றனர். பாராட்டுதல் எத்தனையோ புண்களை ஆற்றிவிடும்.
.
திருமண வாழ்க்கை என்பது, ஏதோ இருவர் சேர்ந்து வாழும் வாழ்க்கை எனபதல்ல, இருவரும் ஒன்றிணைந்து வாழும் வாழ்க்கையாகும். ‘இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்’ - (ஆதியாகமம் 2: 24).

No comments:

Post a Comment