Saturday, December 15, 2012

ஹென்றி போஸ் - தந்தையின் மேல் அலாதி பிரியம்

ஹென்றி போஸ் (Henry Bosch –Editor of Our Daily Bread) நான்கு அல்லது ஐந்து வயது இருக்கும்போது, அவர் தந்தையின் மேல் அலாதி பிரியம் வைத்திருந்தார். அவரது தந்தைக்கு கறுப்பு வால்நட் என்னும் பருப்பு மிகவும் இஷ்டம். அது அவர்கள் வீட்டில் வாங்குவது மிகவும் அரிது. ஒருநாள் அவர் வெளியில் தெருவில் ஒரு வால்நட் பருப்பை கண்டார். அதை எடுத்து வந்து தனது தாயாரிடம் கொடுத்து, உடைத்து சாப்பிட வேண்டும் என்று வீட்டிற்கு ஓடி வந்தார். அப்போது அவருக்கு தனது தந்தையின் ஞாபகம் வந்தது. அதை அப்படியே வைத்து தனது தந்தை சாயங்காலம் வீட்டிற்கு வந்தவுடன் கொடுக்க வேண்டும் என்று அதை அப்படியே பத்திரமாக வைத்தார். சாயங்காலம் அவரது தகப்பனார், தூரத்தில் வரும்போதே, அவர் ஓடிப் போய் காலை கட்டிக்கொண்டு, வீடு வரை அப்படியே நடந்து வந்தார்.
.
இரவில் சாப்பிட போகுமுன், அந்த வால்நட்டை எடுத்து வந்து தன் தகப்பனிடம் கொடுத்து, ‘அப்பா இந்தாருங்கள், இதை நான் இந்த நாள் முழுவதும் உங்களுக்கென்று வைத்திருந்தேன்’ என்று அன்புடன் கொடுத்தார். ஆனால் அவரது தகப்பன் அதை உடைக்கவும் இல்லை சாப்பிடவும் இல்லை.
.
ஆனால் முப்பது வருடங்கள் கழித்து, அவரது தகப்பன் மரித்த பின்பு அவருடைய மேஜையில் ஒரு சிறிய பெட்டியில் அந்த வால்நட் பத்திரமாக வைக்கப்பட்டிருப்பதை அவர் கண்டார். அவரது தாயார் ‘என் மகனிடமிருந்து கிடைத்த இநத அன்பின் பரிசை நான் சாகும்வரை பத்திரமாக வைத்திருப்பேன்’ என்று தகப்பன் கூறினார் என்று கூறினார்களாம்.
.
இன்று நாம் எந்த அளவு நமது தாயையோ, தகப்பனையோ மனைவியையோ, கணவரையோ, பிள்ளைகளையோ நேசிக்கிறோம்? ‘ ஷாஜகானைப் போல ஒரு தாஜ்மகாலை கட்டினால்தான் அன்பு அதிகம் என்று அர்த்தமில்லை. நாம் நமது அன்பை சிறிய காரியங்களில் வெளிப்படுத்தினாலும், அது நிச்சயமாக கிரியை செய்யும். வெளிநாடுகளில், கணவன் தன் மனைவியை தினமும், உன்னை நேசிக்கிறேன், நீதான் எனக்கு இனியவள் எனறு கூறுவார்களாம். அந்த அன்பு எவ்வளவு உண்மை என்று நமக்கு தெரியாது. ஆனால் அதை அவர்கள் வெளிப்படுத்தும்போது, அந்த மனைவி சந்தோஷப்படுகிறாள். அந்த பழக்கங்கள் நமது இந்தியாவின் கலாச்சாரத்தில் இல்லை. ஆனால் வேறு விதத்தில் கணவன் அதை வெளிப்படுத்தலாம். மனைவியும் அப்படி வெளிப்படுத்தலாம்.

No comments:

Post a Comment