Friday, August 31, 2012

மற்றவர்களை குற்றவாளிகலாக பார்க்காதீர்கள்

ஒரு வாலிப பெண், ஒரு சபைக்கு சென்றபோது, கூறப்பட்ட கர்த்தருடைய வார்த்தையால் தொடப்பட்டு இரட்சிக்கப்பட்டாள். அவளது கடந்த காலம் மிகவும் பாவம் நிறைந்ததாக இருந்தது. குடிப்பழக்கத்திலும், போதை மருந்து மற்றும் மற்ற கெட்டப்பழக்கங்களிலும் ஈடுபட்டிருந்தாள். ஆனால் கர்த்தரை ஏற்று கொண்டப்பின் அவள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, புதிய வாழ்க்கை வாழ ஆரம்பித்தாள்.
.
கர்த்தருக்குள் வளர்ந்து, அவருடைய ஊழியத்தையும் செய்ய ஆரம்பித்தாள். அப்போது அந்த சபையின் போதகரின் மகன் அந்த பெண்ணை விரும்ப ஆரம்பித்தான். இருவரும் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தார்கள். அதை கேள்விப்பட்ட சபையின் மக்கள், தங்கள் போதகருடைய மகனுக்கு கடந்த வாழ்வில் பலதரப்பட்ட பாவத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க கூடாது என்று தடை செய்ய ஆரம்பித்தனர். சபையில் பெரும் பிரச்சனை கிளம்பியது. அந்த பெண் தன்னால் சபையில் இத்தனை பிரச்சனை வருகிறதே என அழ ஆரம்பித்தாள். அப்போது போதகரின் மகனுக்கு தன் மனைவியாக வர இருக்கிற பெண்ணை அவர்கள் அனைவரும் தவறாக பேசுவதை கேட்க பொறுக்கவில்லை.
.
அந்த போதகரின் மகன் எழுந்து 'இப்போது நீங்கள் என் மனைவியாகப் போகும் பெண்ணை குறித்து சந்தேகப்படவில்லை, இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தை குறித்தே சந்தேகப்படுகிறீர்கள். நீங்கள் அவளுடைய பாவங்கள் முற்றிலும் கழுவப்பட்டது என்று விசுவாசிக்காமல், இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமையை குறித்தே சந்தேகப்படுகிறீர்களே, பின் நீங்கள் எப்படி உங்கள் பாவங்கள் கிறிஸ்துவின் இரத்தத்தால் மன்னிக்கப்பட்டதென்று விசுவாசிக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதை கேட்ட சபை மக்களின் இருதயம் குத்தப்பட்டது. தங்கள் தவறை உணர்ந்தார்கள்.
.
ஆம், தேவன் நம் பாவங்களை மன்னித்திருக்க, மன்னிக்கப்பட்ட மற்றொரு பாவியை தங்களை விட மோசமானவள், அவள் சாதாரண வாழ்வு வாழ தகுதி அற்றவள் என்று நாம் நியாயந்தீர்க்க நமக்கு என்ன நியாயம் இருக்கிறது? மற்றவர்களை நியாயந்தீர்க்க நாம் யார்? கொடிய பாவிகளாயிருந்த நம்மையும் தேவன் மன்னித்தாரே!
.
ஒரு வேளை, பாவம் செய்தவர்கள் கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டு, ஆவிக்குரிய வாழ்வில் முன்னேறி கொண்டு போய் கொண்டிருக்கலாம், ஆனால் குறை சொல்கிறவர்கள் குறை சொல்லி சொல்லியே இன்னும் மன்னிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாகவே தீர்த்துக் கொண்டு, கர்த்தருடைய பார்வையில் தாங்களே குற்றவாளிகளாக வாழ்ந்து கொண்டிருக்கலாம்!
.
ஒரு ஊழியக்காரர் தன் கூட்டத்தை முடித்த பிறகு, அவரிடம் ஜெபிப்பதற்கு ஏராளமான பேர் ஒரு கியூவில் நின்று ஜெபிக்க வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆவியானவர் அந்த ஊழியரிடம், பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை குறித்து, 'இந்த பெண் இந்த பாவம் செய்து விட்டு உன்னிடம் ஜெபிக்க வந்து கொண்டிருக்கிறாள்' என்று உணர்த்தினார். ஊழியர் தொடர்ந்து ஒவ்வொருவருக்காகவும் ஜெபித்து கொண்டே இருந்தார். கடைசியில் அந்த பெண்ணின் முறை வந்தபோது, ஆவியானவர் அவரிடம், 'இந்த பெண்ணை அவளுடைய பாவத்தை குறித்து ஒன்றும் சொல்லாதே' என்று எச்சரித்தாராம். அப்படியே அவரும் ஒன்றும் சொல்லாமல் சாதாரணமாக ஜெபித்து அனுப்பி விட்டாராம். பின் அவர் தேவனிடத்தில் ' ஏன் ஆண்டவரே, அந்த பெண் வரும்போது என்னிடம் இந்த பாவம் செய்தாள் என்று கூறினீர், ஆனால் ஜெபிக்க வரும்போதோ ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று ஏன் கூறினீர்' என்று கேட்டாராம். அதற்கு ஆவியானவர், 'அவள் வரிசையில் நிற்கும்போது பாவத்தோடு நின்று கொண்டிருந்தாள். ஆனால் வரிசையில் வரும்போது, என்னிடம் தன் பாவத்தை மன்னித்து விடும்படி ஜெபித்து, மன்றாடினாள். நானும் அவள் பாவத்தை மன்னித்து விட்டேன், பின் நீ அதை குறித்து அவளிடம் ஏன் ஞாபகப்படுத்த வேண்டும்?' என்று கேட்டாராம். இது உண்மையில் நடந்த சம்பவம்.

No comments:

Post a Comment