Thursday, September 20, 2012

கிறிஸ்துவை பிரதிபலிக்கும் வாழ்வு

வாலிபர்கள் மத்தியில் பகுதி நேரமாக ஊழியம் செய்யும் ஒரு சகோதரர் மற்றவர்களிடம் பழகும்போது கிறிஸ்துவின் சாயலை பிரதிபலித்து வாழ பிரயாசமெடுப்பார். ஒரு முறை அவரது காரை ரிப்பேர் செய்ய வேண்டி வந்தது. வழக்கமாக செல்லும் கடையின் மெக்கானிக் ஊரில் இல்லாதபடியால் ஒரு புதிய கடைக்கு சென்று காரை ரிப்பேர் செய்து தரும்படி மெக்கனிக்கிடம் கூறினார். அவர் நிமிர்ந்துக் கூட பார்க்காமல் அலட்சியமாய் சாவியை வாங்கி கொண்டு, 'சரி சரி உடனே முடியாது, நாளை பார்க்கலாம்' என்று கூறினார். மறுநாள் சென்றபோது சரியான பதிலை கூறாமல், அடுத்த நாள் வரும்படி கூறினார். அந்த ஊழியர் தன் நண்பரிடம், அந்த மெக்கானிக் நடந்துகொள்ளும் விதத்தை பற்றி கூறினார். அதற்கு நண்பர், 'நீங்கள் இப்படி அமைதியாய் இருந்தால் அவன் அப்படித்தான் பேசுவான், கடிமனாய் பேசினால் சீக்கிரமாய் வேலையை முடித்து கொடுப்பான்' என்று கூறினார்.
.
இவரும் மறுநாள் போய் அந்த மெக்கானிக்கை நன்கு திட்டவேண்டுமென்று
நினைத்து கொண்டு போனார். ஆனால் அவரை பார்த்தவுடன், மெக்கானிக் சிரித்துக் கொண்டே, சாவியை எடுத்து கொடுத்து, 'வண்டியை எடுத்து செல்லலாம் சார்' என்றார். மேலும் மெக்கானிக், 'கொஞ்ச நாட்களுக்கு முன்பதாக என் மனைவி கிறிஸ்தவளாக மாறி விட்டாள். என்னையும் ஆலயத்திற்கு வரும்படி அழைக்கிறாள். கிறிஸ்தவர்கள் அன்பானவர்கள், பொறுமையானவர்கள் என்று சொல்லுவாள். உங்கள் காரில் வசனத்தை பார்த்ததும், நீங்களொரு கிறிஸ்தவர் என்று அறிந்து கொண்டேன். ஆம், உண்மையிலேயே என் மனைவி கூறிய பொறுமையை உங்களிடம் கண்டேன், நானும் ஒரு கிறிஸ்தவனாக வாழ விரும்புகிறேன்' என்றார். காரில் அமர்ந்த தேவ மனிதர், 'ஆண்டவரே, என்னை மன்னியும், நான் என் கோபத்தையும், கடின வார்த்தையையும் அவரிடம் வெளிப்படுத்தியிருந்தால், அவர் உம்மிடம் வருவது தடைப்பட்டிருக்குமே எந்த சூழ்நிலையிலும் நான் உம்மை பிரதிபலிக்க உதவி செய்யும்' என்று ஜெபித்து கடந்து சென்றார்.

No comments:

Post a Comment