Tuesday, September 9, 2014

கர்த்தருடைய உக்கிரகத்தின் நாள்

ஒரு பணக்கார பெண் ஒரு வைத்தியரிடம் தன் கால் வலிக்காக பார்க்க சென்றிருந்தாள். அந்த வைத்தியர், 'உனக்கு முன் நான்கு பேர் இருக்கிறார்கள். நீ போய் உன் பேர் வரும் போது வா' என்று அனுப்பினார். அதற்கு அந்த பெண் 'நான் யார் தெரியுமா? நான் நினைத்தால் உன்னை வேலையிலிருந்தே எடுத்து விட முடியும், ஏன் நான் கை நீட்டி உன்னை அடிக்கலாம், இந்த நாட்டின் சட்டப்படி யாராவது வைத்தியரை அடித்தால் 500 பணத்தை கட்ட வேண்டும் அதை ஒரு நிமிடத்தில் கட்டி நான் வெளியே வந்து விடுவேன்' என்று அகங்காரத்தோடு பேசினாள். அதற்கு அந்த வைத்தியர், 'நானும் உன்னை அடித்து, அதே 500 பணத்தை கட்டி வெளியே வந்துவிடுவேன்' என்று கூறினார். சில பணக்காரர்களுக்கு பணம்தான் தங்கள் பெலன், அது அவர்களை எப்போதும் காப்பாற்றும் என்று நம்பி கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் பணம் ஒன்றுமில்லாமற்போகும் என்பதை அவர்கள் அறிவதில்லை. அவர்களுடைய இருதயத்தில் அவர்களுடைய பொருள் அவர்களுக்கு அரணான பட்டணம் போலிருக்கிறது, அதனால் அதை கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று துணிகரம் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இயேசுகிறிஸ்து 'ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்' என்றார் - (லூக்கா 19:25).
.
கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே சடிதியாய் அழிவு வரும். அப்போது மனிதருடைய வெள்ளியும் பொன்னும் அவர்களை தப்புவிக்கமாட்டாது. தங்கள் செல்வ பெருக்கினால் மகிழ்ந்து, உலகத்தில் உள்ள அத்தனை அக்கிரமங்களையும் செய்து கொண்டு, சந்தோஷமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் மேல் அழிவு சீக்கிரமாய் வரும். 'ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்ந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள். உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்தது, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத் தின்னும் கடைசி நாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்' (யாக்கோபு 5:1-3) என்று வேதம் எச்சரிக்கிறது. ஐசுவரியவான்களின் மேல் கர்த்தரின் நாளில் தீங்கு சடுதியாய் வரும்.

கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார். - (செப்பனியா 1:18) .

No comments:

Post a Comment