Tuesday, February 26, 2013

சபையில் ஐக்கியப்பட்டிரு

"வேத-ஒளி" நீலகிரி மலையில் இருக்கும் ஒரே ஒரு கிறிஸ்தவ ஆலயம். அதன் போதகர் அருளானந்தம் தேவனை அதிகமாய் நேசித்து அவருக்காக வாழும் உத்தம ஊழியர். அவரது தயாள குணத்தால் கிறிஸ்துவை அறியாதவர்கள் கூட அவர் மீது அதிக மரியாதை வைத்திருந்தனர்.

அந்த ஆலயத்தில் வாரந்தோறும் தேவனை ஆராதித்து வந்த "சாலமன்" அங்கு வருவதை சில வாரங்களாக நிறுத்திவிட்டான். அவன் வேறெந்த ஆராதனையிலும் கலந்து கொள்ளவில்லை என்று போதகருக்கு அறிவிக்கப்பட்டது. மிகவும் வேதனையுற்ற போதகர் அவனை சந்திக்க முடிவு செய்தார்.

ஒரு-நாள் மாலை அந்த ஊரை கடும்-குளிர் மூடியிருந்தது. சாலமன் தனது வீட்டில் மர கட்டைகளை எரித்து அதில் குளிர் காய்ந்து கொண்டிருந்தான். திடீரேனே "டக் டக்" என்று கதவை தட்டும் சத்தம் கேட்கவே, எழுந்து சென்று கதவை திறந்தான். அங்கு போதகர் நின்று கொண்டிருந்தார். போதகர் தனது வீட்டிற்கு வந்திருக்கும் நோக்கத்தை அவன் எளிதில் புரிந்து கொண்டான். "உள்ளே வாருங்கள்" என்று வரவேற்றான்.

போதகர் புன்னகையோடு உள்ளே வந்து நெருப்பினண்டை கிடத்தி இருந்த இருக்கையில் அமர்ந்தார். சாலமனும் அவர் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான். போதகர் ஒன்றுமே பேசாமல், எரிந்து கொண்டிருக்கும் நெருப்பை உற்று கவனித்துக் கொண்டிருந்தார்.

சில நிமிடங்கள் கடந்தும் அவர் எதுவும் பேசவில்லை, 'சாலமனது' மனதில் குழப்பம் நிழலிட்டது. போதகர் நெருப்பையே தீவிரமாய் கவனித்துக் கொண்டிருந்தார். பட்டென இருக்கையிலிருந்த எழுந்த போதகர் ஒரு இடுக்கியை எடுத்து பிரகாசமாய் எரிந்து கொண்டிருந்த ஒரு மர துண்டை தனியாக எடுத்து வைத்தார். எதுவும் பேசாமல் மீண்டும் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

சாலமன் ஒன்றும் புரியாமல் தனியாக வைக்கப்பட்ட மர துண்டை கவனித்துக் கொண்டிருந்தான். தனியே வைக்கப்பட்ட மர-துண்டில் நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது, சிறிது நேரத்தில் பிரகாசமான அந்த மர-துண்டு மங்கி எரிய ஆரம்பித்தது, இறுதியில் அணைந்தே விட்டது.

ஆரம்பம் முதல் எதுவுமே பேசாத போதகர், தான் கிளம்பும் நேரம் வந்துவிட்டது என்று அறிந்து இருக்கையை விட்டு எழுந்தார். அணைந்து போன அந்த மர-துண்டை மீண்டும் எரிந்து கொண்டிருக்கும் மர-துண்டுகளோடு வைத்தார். துரிதமாக அது பற்றி எரிந்து பிரகாசிக்க ஆரம்பித்தது. இதை கவனித்துக் கொண்டிருந்த சாலமனின் கண்களில் நீர் கசிந்தது.

போதகர் கதவை நோக்கி நடக்க தொடங்கினார். கதவை திறக்கும் போது , சாலமன் பின்னிருந்து "ஐயா! தங்கள் வருகைக்கும் , இந்த அக்னி உபதேசத்திற்கும் மிக்க நன்றி. வருகிற ஞாயிற்று கிழமை ஆலயத்தின் முதல் வரிசையில் அமர்ந்திருப்பேன்' என்றான்.

புன்னகை உதிர்த்து அமைதலாய் கடந்து போனார் போதகர்.

நண்பர்களே! நமக்கு இவ்வுலகில் பேசாத உபதேசங்கள் பல உண்டு. அவைகள் தேவன் நமக்கு தரும் அனுபவங்களே.

கடந்த சில வாரங்களாக ஆலயம் செல்ல தவறியதால் (அல்லது அதிக ஈடுபாட்டோடு ஆராதனைக்கு செல்லாததால்) நீங்கள் மங்கி எரிந்து கொண்டிருக்கலாம். நாளை ஆலயம் செல்ல எல்லா ஆயத்தமும் இன்றே செய்துவிடுங்கள். கிறிஸ்து உங்களை பிரகாசிக்கச் செய்வார்

** 1 John (1:7) அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் 'ஒருவரோடொருவர்' ஐக்கியப்பட்டிருப்போம் **

For More Stories :
KadambamTamil.blogspot.com

No comments:

Post a Comment