Tuesday, February 26, 2013

மன்னிப்பு

சிறுவன் ஜானியும், அவனது சகோதரி மேரியும் விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தனர். ஓய்வுநேரத்தில் விளையாட ஜானிக்கு 'சுண்டுவில்' ஒன்றை பாட்டி கொடுத்தார்.

அடுத்த நாளே, பாட்டியின் வீட்டை சுற்றி இருக்கும் அடர்ந்த வனத்திற்கு ஜானி சென்றான். 'சுண்டுவில்லை' கொண்டு பறவை பூச்சி ஆகியவற்றை அடிக்க முயற்சி செய்தான். ஆனால் அவனால் சரியாக இலக்கை குறி பார்த்து அடிக்க முடியவில்லை.

மிகவும் சோர்வடைந்து வீட்டிற்கு திரும்பினான். அப்போது பாட்டி வளர்க்கும் வாத்து அவனது அறையில் நின்றுகொண்டிருந்தது. இதையாவது அடிக்க முயற்சிப்போமே என சுண்டுவில்லால் அதை குறி வைத்தான். இம்முறை துரதிர்ஷ்டவசமாக குறி தவறவில்லை. வாத்தினுடைய தலை நசுங்கி இறந்தது.

பெரிய தவறு செய்துவிட்டோமே என பயந்த ஜானி, யாருக்கும் தெரியாமல் வாத்தை புதைத்து விட்டான். இவை எல்லாவற்றையும் அவன் சகோதரி மேரி பார்த்துக் கொண்டிருந்தாள். அவனிடன், "நீ வாத்தை கொன்றது எனக்கு தெரியும். நான் சொல்லும்படியெல்லாம் கேட்காவிட்டால் பாட்டியிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடுவேன்" என்று மிரட்டினாள்.

ஜானியும் பயத்தில் ஒப்புக்கொண்டான். பாட்டி மேரியை மாட்டுக்கு தீவணம் போட்டுவிட்டு வா என்று சொன்னார். ஜானி எனக்காக இந்த வேலையை செய்வான் என்று சொன்னாள். அப்பாவி ஜானி "நான் ஏன் செய்ய வேண்டும். உன்னை தானே சொன்னார்கள்?" என்றான். மேரி ஜானியிடம் "வாத்து ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்டாள். வேறு வழியின்றி ஜானி வேலையை செய்தான்.

இப்படி மேரி ஜானியை "வாத்து ஞாபகம் இருக்கிறதா?" "வாத்து ஞாபகம் இருக்கிறதா?" என்ற கேள்வியை கேட்டே எல்லா வேலைகளையும் செய்ய வைத்துவிடுவாள். ஜானியின் விடுமுறை மிகவும் கொடூரமாக போய்க் கொண்டிருந்தது.

ஜானியால் மேரியின் அச்சுறுத்தலை தாங்க முடியவில்லை. ஒருநாள் காலை, தனது பாட்டியிடம் சென்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டான். மேரி தனக்கு செய்த கொடுமைகளை சொல்லி அழுதான்.

பாட்டி அவனிடம் "அழாதே ஜானி, நீ அந்த வாத்தை தவறுதலாக கொன்றுவிட்டதை நான் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். நான் உன்னை அன்றே மன்னித்துவிட்டேன். அதனால் தான் அதை பற்றி உன்னிடம் கேட்கவில்லை. இனிமேல் மேரிக்கு நீ பயப்பட வேண்டாம். " என்று ஆறுதல் சொல்லி அணைத்துக் கொண்டார்.

ஜானி, குற்ற மனப்பான்மை நீங்கி விடுமுறையை சந்தோஷமாக கழித்தான்.

_-__-__-__-__-__-__-__-__-__-__-__-__-__-__-__-__-__-__

நண்பர்களே! இதுபோலவே குற்ற உணன்ர்வினால் சிக்கி தவிக்கும் உங்களை விடுவிக்கவே கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உங்கள் துக்கங்களை அவர் ஏற்றுக் கொண்டார். அவரிடம் மட்டுமே பாவத்துக்கான மன்னிப்ப் உண்டு. உண்மையாய் மனந்திரும்புவோரை அவர் மன்னித்து அனைத்துக் கொள்கிறார். மகனாய், மகளாய் ஏற்றுக் கொள்கிறார்.

(யோவான் 3:16) தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்

No comments:

Post a Comment