Wednesday, October 10, 2012

தாயார் ஒரு ஜெப வீராங்கனை

சீனாவில் எழுப்புதலுக்கு காரணமாயிருந்த ஹட்சன் டெய்லர் என்ற ஊழியரை  குறித்து அநேகருக்கு தெரியும். அவருக்கு ஜெபிக்கும் தாயார் இருந்தார் என்றும், அவர்களுடைய ஜெபத்தினால் அவர் இரட்சிக்கப்பட்டார் என்றும் ஒருவேளை நாம் அறிந்திருக்கலாம். அந்த முழு சம்பவமும் நாம் அறிந்திருப்பது நமது குடும்பங்களையும் தேவன் ஆசீர்வதிப்பதற்கு ஏதுவாக அமையும்.ஹட்சனின் தாயார் ஒரு ஜெப வீராங்கனை. அவர்கள் எப்போதும் ஹட்சன் ஒரு பெரிய தேவ ஊழியராக வேண்டும் என்று ஜெபித்து வந்தார்கள். ஆனால் ஹட்சன் தனது 15ஆவது வயதில் ஒரு பேங்கில் வேலைக்கு சேர்ந்து, ஜெபிக்க மறந்து, கிறிஸ்தவர்களை கேலி கிண்டல் செய்து, தேவனற்றவராகவே வாழ்ந்து வந்தார். அது அவருடைய தாயாருக்கு மிகவும் வருத்தமாகவே இருந்து வந்தது. ஹட்சனுக்கு இரண்டு வயது இளைய சகோதரி அமிலியா இரட்சிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கும் ஹட்சனை குறித்து அவர் இரட்சிக்கப்பட வேண்டுமே என்ற பாரம் இருந்தது. தொடர்ந்து அவர்களும் ஜெபித்து வந்தார்கள்.
.
ஒரு முறை ஹட்சனின் தாயார் அவர்களுடைய தோழியை சந்திக்க 70 மைல் தூரம் கடந்து செல்ல வேண்டி வந்தது. அவர்கள் போய் சேர்ந்த அன்று மதியம் அவர்களுடைய உள்ளத்தில் ஹட்சனுக்காக ஜெபிக்க வேண்டும் என்று உந்துதல் பெற்றார்கள். உடனே அவர்கள் உள்ளே சென்று, கதவை தாழிட்டு, கர்த்தரிடம் ஹட்சனுக்காக மன்றாட தொடங்கினார்கள். ஆத்தனை தூரத்தில் தன் மகன் எங்கிருக்கிறான், என்ன செய்கிறான் என்று அறியாதவர்களாக, அவனுக்காக ஊக்கமாய் ஜெபித்து கொண்டிருந்தார்கள்.
.
அதே மதிய வேளையில் ஹட்சன் அந்த நாளில் அவருக்கு வேலை இல்லாமல் விடுமுறை தினமாக இருந்தபடியால், தன் தகப்பனின் அறைக்குள் சென்று ஏதாவது புத்தகம் எடுத்து படிக்கலாம் என்று தேட சென்றார். அப்பொழுது அவருக்கு 'எல்லாம் முடிந்தது' என்ற கிறிஸ்தவ கைப்பிரதி கிடைத்தது. அதை படிக்க ஆரம்பித்த ஹட்சனோடு ஆவியானவர் இடைபட ஆரம்பித்தார். தேவனாலே அன்றி தன்னால் எதையும் செய்ய முடியாதென்றும், தேவனை தன் முழு இருதயத்தோடும் நேசிக்கவும், விசுவாசிக்கவும் மாத்திரமே செய்ய வேண்டும் என்பதை அவர் அறிந்தவராக, அப்போதே அவர் தன்னுடைய இருதயத்தை தேவனுக்கு அர்ப்பணித்தார். தன் பாவங்களை அறிக்கையிட்டு, புது மனிதனாக வெளிவந்தார்.
.
அவருடைய தாயார் ஜெபித்த அதே மதிய வேளையில் தானே இந்த அற்புதம் நிகழ்ந்தது. அந்த தாயார் ஜெபித்து முடித்து, தேவன் தன் ஜெபத்தை கேட்டார் என்ற உறுதியுடன் கர்த்தரை துதிக்க ஆரம்பித்தார்கள்.
.
ஹட்சன் தன் புதிய அனுபவத்தை தன் சகோதரி அமிலியாவிடம் சொல்லி, 'அம்மாவிற்கு இப்போது இதை தெரியப்படுத்தாதே, அவர்கள் வரும்போது நானே அவர்களிடம் சொல்வேன்' என்று கூறினார். சகோதரியும் அதற்கு ஒப்புக்கொண்டு, தேவன் தன் சகோதரனை சந்தித்ததற்காக அவரை துதித்தார்கள்.
.
இரண்டு வாரம் கழித்து அவருடைய தாயார் வீட்டிற்கு வந்தபோது, ஹட்சன் அவர்களுக்கு எதிர்கொண்டோடி வரவேற்றார். அவர் எதுவும் சொல்ல ஆரம்பிக்கிறதற்கு முன்பே அவருடைய தாயார், 'மகனே எனக்கு தெரியும், நீ என்ன சொல்ல வருகிறாய் என்று. நான் ஏற்கனவே கர்த்தருக்கு அதற்காக நன்றி செலுத்தி கொண்டிருக்கிறேன்' என்று கூறினார்கள். ஹட்சனுக்கு புரியவில்லை, ஒருவேளை அமிலியாதான் சொல்லியிருப்பார்கள் என்று நினைத்து, 'அமிலியா உங்களுக்கு தெரிவித்தாளா?' என்று கேட்டார். அதற்கு தாயார், 'இல்லை, தேவனே என் இருதயத்தில் நீ இரட்சிக்கப்பட்ட அன்று மதியமே எனக்கு கூறினார்' என்று சொன்னார்கள். 'நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்' (எரேமியா 23:23). ஆமென்.

No comments:

Post a Comment